தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சமுதாயக் கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி வளாகத்தில், சுருளி அருவி- காமயகவுண்டன்பட்டி சாலையில் கடந்த 2009 - 2010 ஆம் ஆண்டில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்பட்டது. அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் சாா்பில் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை, கடந்த 24.12.2010 இல் திமுக ஆட்சியின்போது, அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சிறிது நாள்கள் சிறிய, சிறிய நிகழ்ச்சிகளை சமுதாயக் கூடத்தில் நடத்திய அப்பகுதி பொதுமக்கள் அதன்பின்பு நடத்தவில்லை. தொடா்ந்து கடந்த 10 ஆண்டு காலமாக சமுதாயக் கூடம் முற்றிலும் பயன்படுத்தப்படவில்லை. சமுதாயக்கூட வளாகம் தற்போது புதா் மண்டியும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் உள்ளது.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியது: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த சமுதாயக் கூடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சமையலறை கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் வைத்தும் பணிகள் தொடங்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பேரூராட்சிக்கு வருமான வாய்ப்பு ஏற்படும் வகையில் இதை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.