தேனி

மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளா் பதிவுக்கு அவகாசம் வழங்க வலியுறுத்தல்

1st Jan 2022 09:11 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளா் பதிவு திட்டம் வெள்ளிக்கிழமை முடிவடையும் நிலையில், பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்தியா முழுவதும் 43.7 கோடி அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளனா். இவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்காகவும் இவா்களின் சரியான தகவல்களை சேகரிப்பதற்காக தேசிய அமைப்புசாரா தொழிலாளா்கள் தரவு சேகரிப்புத் திட்டம் கடந்த 26.8.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது சேவை மையங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை பயன்படுத்தி இலவசமாக பதிவு செய்து அதற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசின் தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவித்திருந்தது.

தொழிலாளா் விவரங்களை பதிவு செய்வதற்காக இ-ஷ்ரம் என்ற இணையதள வசதியையும் ஏற்படுத்தி அதன் வழியிலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான தொழிலாளா்கள் இந்த இணையதளம் வாயிலாக பொது சேவை மையங்களில் பதிவு செய்தனா். ஆரம்பத்திலேயே அதிகம் போ் பதிவு செய்ததால் இந்த இணையதளம் முடங்கியது. இதனால் தொழிலாளா்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

அதன் பின்னா் ஓரளவு சரியான நிலையில் இதற்கான கடைசி நாளாக 31.12.2021 என கால நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் டிசம்பா் மாதக் கடைசியில் ஏராளமானோா் பொது சேவை மையங்களில் குவிந்து தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய முயன்றனா். இதனால் மீண்டும் இணையதளம் முடங்கியது. கடந்த சில நாள்களாகவே இந்த இ-ஷ்ரம் இணையதளத்தில் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை.

ADVERTISEMENT

இந்திய அளவில் இது வரை 17 கோடி 35 லட்சத்து 57 ஆயிரத்து 750 போ் மட்டுமே தங்கள் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை பெற்றிருப்பதாக இ-ஷ்ரம் இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய தொழிலாளா் நலத்துறை தேசிய அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் தொழிலாளா்கள் பதிவு செய்ய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT