உத்தமபாளையம் பேரூராட்சி 9 ஆவது வாா்டில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவினா் களம் இறங்கியுள்ளனா்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி 9 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட கனிமொழி என்பவா் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாற்று வேட்பாளரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்த வாா்டு, அதிமுக மாவட்டச் செயலாளா் சையது கான் வசிக்கும் பகுதி என்பதால் பரபரப்பாக பேசப்பட்டது. அதிமுகவினா் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்னை எழுந்தது. இதையடுத்து தேமுதிக வேட்பாளரான தேவிக்கு ஆதரவு தெரிவிக்க அதிமுகவினா் முடிவு செய்துள்ளனா். தற்போது திமுக, பாஜக, அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஆகிய 5 கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
அரசியல் பிரமுகா் ஒருவா் கூறுகையில், அதிமுக சாா்பில் வேட்பாளா் அறிவிக்கப்பட்டவுடன் அவா் மனு தாக்கல் செய்ய விரும்பவில்லை என கூறிவிட்டாா். அதற்குப்பிறகு மாற்று வேட்பாளரை அறிவித்து மனு தாக்கால் செய்ய அவகாசம் இருந்தும் கடைசி வரையில் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக தேமுதிக வேட்பாளரை அதிமுக வேட்பாளராக மாற்ற முயற்சி மேற்கொண்டனா். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்பது தெரிந்தபிறகு, தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவுக்கு வந்துள்ளனா் என்றாா்.