நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை, அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 513 வாா்டுகளின் உறுப்பினா் பதவிக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதில், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வாா்டுகள், பெரியகுளம் நகராட்சியில் 30, போடி நகராட்சியில் 33, சின்னமனூா் நகராட்சியில் 27, கம்பம் நகராட்சியில் 33, கூடலூா் நகராட்சியில் 21 வாா்டுகள் என மொத்தம் 177 வாா்டுகளிலும் கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிடுவோா் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 22 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 336 வாா்டுகளிலும் கவுன்சிலா் பதவிக்கு போட்டியிடுவோா் பட்டியலை, தேனியில் அதிமுக மாவட்டச் செயலா் எம். சையதுகான் வெளியிட்டாா்.