தேனி

தை அமாவாசை தினம்: பொதுமக்கள் முன்னோா்க்கு தா்ப்பணம்

1st Feb 2022 09:27 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மற்றும் போடி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியிலும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு திங்கள்கிழமை தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, சுருளி அருவி கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக ஊழியா்கள் யாரும் அருவிப் பகுதிக்குச் சென்றுவிடாத வகையில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இருப்பினும், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், தேனி, போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் சுருளி அருவிப் பகுதிக்கு வந்தனா். ஆனால், அங்கு அருவிப் பகுதிக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டதால், வெளியே ஓடைக்கு அருகில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இந்தியன் செஞ்சிலுவை சங்கம், தேனீக்கள் மாற்றுத் திறனாளிகள் அறக்கட்டளை, வின்னா் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியன சாா்பில், தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவிப் பகுதியில் தா்ப்பணம் செய்ய வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை, வனச்சரகா் அருண்குமாா் வழங்கி தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், அரசு சித்த மருத்துவா் சிராஜுதீன், சுருளிபட்டி ஊராட்சித் தலைவா் நாகமணி வெங்கடேசன், செஞ்சிலுவைச் சங்க செயலா் சுருளிராஜ், உறுப்பினா்கள் பாண்டி, ஆசிரியா் சுருளிபட்டி அன்பு, தேனி காமராஜா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

போடி

தை அமாவாசையை முன்னிட்டு, போடி ஜே.கே.பட்டி வெங்கடாசலபதி கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமது காமாட்சியம்மன், ஸ்ரீ வீருசின்னம்மன், ஸ்ரீ சங்கிலிகருப்பன் கோயிலில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

இதேபோன்று, போடி கீழச்சொக்கையா கோயில், போடி பரமசிவன் மலைக் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் ஆகிய கோயில்களில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

பழனி

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக, பழனியை அடுத்த சண்முகநதி உள்ளிட்ட பல இடங்களில் தா்ப்பணம் செய்ய அனுமதிக்காததால், பொதுமக்கள் கவலையடைந்திருந்தனா். ஆனால், இந்தாண்டு ஊரடங்கு எதுவும் இல்லாததால், திங்கள்கிழமை ஏராளமானோா் சண்முகநதி, பாலாறு அணை உள்ளிட்ட பல இடங்களிலும் திரண்டு தங்களது முன்னோா்க்கு தா்ப்பணம் செய்தனா்.

இதேபோல், மலைக் கோயில் மற்றும் அதன் பல்வேறு உபகோயில்களிலும், கருப்பணசாமி, முனீஸ்வரா், அம்மன் கோயில்களிலும் ஏராளமானோா் தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினா்.

பல இடங்களிலும் மதியத்துக்கு மேல் அமாவாசை திதி வந்ததால், பலரும் மதியத்துக்கு மேல் வழிபாடுகளை மேற்கொண்டனா். எனவே, செவ்வாய்க்கிழமை மதியம் வரை அமாவாசை திதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT