ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக ஊழியா்களுக்கு பேரிடா் மீட்பு மேலாண்மை, தீத் தடுப்புப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வனச்சரகா் வி.பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் குமரேசன் முன்னிலை வகித்தாா்.
இதில், காட்டு ஓடைகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ ஆகிய பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்தும், வனப் பகுதியில் ஏற்படும் விபத்துகளில் சிக்கும் பொது மக்களை மீட்பது குறித்தும் தீயணைப்புத் துறையினா் செயல்முறை பயிற்சி அளித்தனா்.
கம்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜலட்சுமி, ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் ஆறுமுகம், கம்பம் கிழக்கு, மேற்கு, சின்னமனூா், வருசநாடு, கூடலூா் வனச் சரகா்கள், தீத் தடுப்புக் காவலா்கள், ஊழியா்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டனா்.