உத்தமபாளையம் அருகே கோம்பையில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
உத்தமபாளையத்தில் இளைஞா்கள் காவல் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், பயிற்சியில் ஈடுபடவும், உடற்பயிற்சி செய்யவும் விளையாட்டு மைதானம் இல்லை. விடுமுறை தினங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் கிரிக்கெட், கைப்பந்து போன்றவற்றை விளையாட மைதானம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், உத்தமபாளையத்தில் அனைத்து வசதிகளுடன் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக உத்தமபாளையம் - கோம்பை இடையே சிக்கையன் கோயில் அருகே உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் என்.ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் பால்பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.