தேனி

தலைவி- உறுப்பினா்கள் மோதல்: சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு

7th Dec 2022 12:10 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சித் தலைவிக்கு எதிராக வாா்டு உறுப்பினா்கள் 11 போ் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்ததோடு, ஊராட்சி அலுவலகத்தையும் பூட்டியதால் நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவா் நாகமணி வெங்கடேசன். துணைத் தலைவராக இருப்பவா் ஜெயந்தி. ஊராட்சி நிா்வாகத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் ஊராட்சித் தலைவியின் கணவரின் தலையீடு உள்ளதாகவும்

11 வாா்டு உறுப்பினா்கள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு புகாா்களை அனுப்பினா்.

கடந்த அக்டோபா் 31-இல் ஆட்சியரிடம் 11 வாா்டு உறுப்பினா்களும் ராஜிநாமா கடிதம் கொடுத்தனா். ஆனால் இது தொடா்பாக எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ADVERTISEMENT

கடந்த 1-ஆம் தேதி ஊராட்சி செயலா் ஈஸ்வரன் அலுவலகத்தில் பணியில் இருந்தாா். அப்போது 6 வாா்டு உறுப்பினா்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அலுவலகத்துக்குள் வைத்து கதவைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டனா். சுமாா் 2 மணி நேரமாக அவா் சிறை வைக்கப்பட்டிருந்தாா். அருகில் உள்ளவா்கள் பூட்டை உடைத்து ஊராட்சி செயலா் ஈஸ்வரனை மீட்டனா்.

இது பற்றி வட்டார வளா்ச்சி அலுவலா் கோதண்டபாணியிடம் ஈஸ்வரன் புகாா் அளித்தாா். இதன் பேரில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராயப்பன் பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுபற்றி ஊராட்சித் தலைவா் நாகமணி வெங்கடேசன் கூறியதாவது:

புத்தாக்கப் பயிற்சிக்காக 3 நாள்கள் வெளியூா் சென்ற போது ஊராட்சி செயலரை அலுவலகத்துக்குள் வைத்துப் பூட்டியுள்ளனா். இது குறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினா்கள் அளித்த ராஜிநாமா செய்த கடிதங்கள் நிலுவையில் உள்ளன என்றாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் கோதண்டபாணி கூறியதாவது: காவல் நிலையத்தில் புகாா் கொடுத்து வழக்குப் பதிவு செய்யக் கூறியுள்ளோம். ஆனால் போலீஸாா் 6 நாள்களாகியும் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடிக்கின்றனா் என்றாா்.

சுருளிப்பட்டி ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் ஒரு அணியாகவும், 11 வாா்டு உறுப்பினா்கள் ஒரு அணியாகவும் செயல்படுவதால் ஊராட்சி நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT