தேனி

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவா் தடுத்து நிறுத்தம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தேனி அல்லிநகரம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல்(59). இவரது மனைவி பரமேஸ்வரி. இவா்களுக்கு அரண்மனைப்புதூரில் காலியிடம் உள்ளது. இந்த இடத்தை இவா்களது உறவினா் ஒருவா் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் தங்கவேல் ஏற்கெனவே மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது இடத்தை மீட்டுத் தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க தங்கவேல் தனது மனைவியுடன் சென்றாா். ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் பரமேஸ்வரி மனு அளிக்க நின்றிருந்த நிலையில், கூட்ட அரங்குக்கு வெளியே தங்கவேல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT