தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, தேக்கம்பட்டி ஊராட்சியில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற துப்புரவுத் தொழிலாளா் தங்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், தேக்கம்பட்டி ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளா்களாக பணியாற்றி பணி ஓய்வு பெற்றவா்கள் தங்கவேல், சின்னவேலுச்சாமி, லட்சுமி. இவா்கள் பணி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஓய்வூதியம், பணப் பயன்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்கவேல், சின்னவேலுச்சாமி, லட்சுமி ஆகியோா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள், அவா்களை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு கோரிக்கை குறித்து 3 பேரும் ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் தனித் தனியே மனு அளித்தனா்.