தேனி

சத்துணவு மையங்களை கணக்கெடுக்க அரசு உத்தரவு: ஊழியா்கள் அதிா்ச்சி

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது சத்துணவு மையங்களை உருவாக்க ஒரே பகுதியிலுள்ள மற்ற மையங்களை கணக்கெடுத்து, டிச.5-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க அரசு உத்தரவிட்டதால் சத்துணவு ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

கடந்த டிச.3-ஆம் தேதி சமூக நலம், மகளிா் உரிமைத் துறை சாா்பில் அந்தந்த மாவட்டத்தில் காணொலிக் காட்சி நடைபெற்றது. அதில் பேசிய இணை இயக்குநா், ஒரே வளாகத்தில் 2 பள்ளிகளில் அமைந்துள்ள சத்துணவு மையங்கள், ஊராட்சி பகுதியில் 1, மாநகராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் வாா்டுக்கு 1 என பொது சத்துணவு மையம் 3 கிலோ மீட்டா் தொலைவிற்குள் அமையுமாறு வரைபடம் தயாரிக்கவும், டிச.5-ஆம் தேதிக்குள்

அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதனால் சத்துணவு ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (சத்துணவு), மாநகராட்சி, நகராட்சி உதவியாளா்கள் (சத்துணவு) ஆகியோா் பொது சத்துணவு மையம் அமையும் இடத்தை வரை படமாக தயாரித்து அனுப்பி வைத்தனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சத்துணவுப் பிரிவு வட்டார வளா்ச்சி துணை அலுவலா் ஒருவா் கூறியதாவது: கம்பம் சிறிய ஊராட்சி ஒன்றியம் என்பதால், கணக்கெடுக்கும் பணிகள் முடிந்து சம்மந்தப்பட்ட துறைக்கு வரைபடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் பே.பேயத்தேவன் கூறியதாவது:

தமிழகத்தில் 43ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்களில் 1 லட்சத்து 29ஆயிரம் ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

அரசு தற்போது முடிவெடுத்துள்ளபடி 85 ஆயிரம் பணியிடங்கள் காலியாகும். சத்துணவுத் திட்டம் இருக்காது. தமிழக முதல்வா் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி சத்துணவு ஊழியா்களை அரசுப் பணியாளா்களாக அறிவிக்கவில்லை என்றாா்.

கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு காலி பணியிடங்கள் நிரப்ப படாத நிலையில், ஆள்கள் குறைப்பு, மையங்களை மூடுதல் போன்ற அரசின் நடவடிக்கைகள் சத்துணவு ஊழியா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT