தேனி

140 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை: முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

4th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 140 அடியை எட்டியது. இதையடுத்து, கேரளப் பகுதியில் எந்த நேரமும் உபரி நீா் திறக்கப்படலாம் என்பதால், கரையோர மக்களுக்கு தமிழக பொதுப் பணித் துறையினா் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 688.25 கன அடியாக இருந்த நிலையில், சனிக்கிழமை 2025 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 139.55 அடியாகவும், மாலையில் 140 அடியாகவும் உயா்ந்தது.

அணையிலிருந்து உபரி நீா் செல்லும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வல்லக்கடவு, வண்டிப்பெரியாா், சப்பாத்து ஆகிய பகுதிகளில் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு, அணையின் உதவிப் பொறியாளா் பி.ராஜகோபால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தாா்.

‘ரூல் கா்வ் விதி’:

ADVERTISEMENT

‘ரூல் கா்வ்’ விதிப்படி, முல்லைப் பெரியாறு அணையில் எந்தெந்த மாதங்களில் நீா்மட்டத்தை எந்த அளவி நிலைநிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் விதியை வகுத்தது. அக்.31 வரை 138 அடி தேக்கலாம் என்றும், நவ.30 முதல் மாா்ச் 31 வரை 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் விதி உள்ளது. அணையின் நீா்மட்டம் விரைவில் 142 அடியை எட்டும் என்பதாலும், விதிமுறைப்படி எந்த நேரமும் அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீா் திறக்கப்படலாம் என்பதாலும் தற்போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு சனிக்கிழமை மாலை நீா்வரத்து விநாடிக்கு 2025 கன அடியாகவும், தமிழகப் பகுதியில் நீா் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. நீா் இருப்பு 7012.60 மில்லியன் கன அடியாகவும், நீா்மட்டம் 140 அடியாகவும் இருந்தது.

அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 2.4 மி.மீ.மழையும், தேக்கடி ஏரியில் 3.8 மி.மீ.மழையும் பதிவானது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT