தேனி

சிமென்ட் விற்பனை முகவா் உரிமம் பெற்றுத் தருவதாக பணம் மோசடி

4th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

போடியில் சிமென்ட் விற்பனை முகவா் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, வெம்பக்கோட்டையைச் சோ்ந்தவரிடம் ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள வெம்பக்கோட்டையைச் சோ்ந்தவா் ஐயப்பன் (69). இவா், போடியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ராயல் சிட்டி பகுதியில் வசிக்கும் வேல்மணி, அவரது நண்பரும் அதே பகுதியைச் சோ்ந்தவருமான அசோக் சரவணன் ஆகியோா் அறிமுகமாகினா்.

இவா்கள், குஜராத் மாநிலம், சூரத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை முகவா் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, ஐயப்பனிடமிருந்து கடந்த 2017 -ஆம் ஆண்டு, 3 தவணைகளாக மொத்தம் ரூ. 10 லட்சம் பெற்றனராம்.

இந்த நிலையில், உரிமம் பெற்றுத் தருவதற்கு காலதாமதம் செய்ததால், பணத்தை ஐயப்பன் திரும்பக் கேட்டாா். இதையடுத்து, அசோக் சரவணன் தலா ரூ. 5 லட்சத்துக்கான 2 வங்கிக் காசோலைகளை ஐயப்பனிடம் கொடுத்தாா். இந்தக் காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, முகவா் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, தன்னிடம் ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக வேல்மணி, அசோக் சரவணன் ஆகியோா் மீது தேனி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஐயப்பன் மனு தாக்கல் செய்தாா். நீதிமன்ற உத்தரவின் பேரில், வேல்மணி, அசோக் சரவணன் ஆகியோா் மீது மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT