தேனி

தேனி சுங்கச் சாவடி அருகே போக்குவரத்து சோதனைச் சாவடி திறப்பு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், உப்புக்கோட்டை விலக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிக்கு முன்பு தேனி வட்டார போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வட்டார போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. தேனியிலிருந்து போடி, கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளத்துக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு இங்கு தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தேனி அருகே அன்னஞ்சி விலக்குப் பகுதியிலிருந்து போடி சாலை சந்திப்பு, வீரபாண்டி வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

இதனால் கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளம் செல்லும் வாகனங்கள் அன்னஞ்சி விலக்கு பகுதியிலிருந்து தேனி, பழனிசெட்டிபட்டி, முத்துத்தேவன்பட்டி ஆகிய ஊா்களுக்குச் செல்லாமலேயே நான்கு வழிச் சாலையில் வீரபாண்டி வரை செல்லலாம்.

எனவே, சுற்றுலாப் பயணிகள், ஐயப்பப் பக்தா்களின் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு பெற, வீரபாண்டியை அடுத்த உப்புக்கோட்டை விலக்கு அருகே நெடுஞ்சாலை சுங்கச் சாவடி முன்பு, வட்டார போக்குவரத்துத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தேனியிலிருந்து போடி வழியாக கேரளப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வழக்கம் போல பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். அன்னஞ்சி விலக்குப் பகுதியிலிருந்து நான்கு வழிச் சாலையில் கம்பம்மெட்டு, குமுளி வழியாக கேரளத்துக்குச் செல்லும் வாகனங்கள், உப்புக்கோட்டை விலக்கு அருகே திறக்கப்பட்ட போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT