தேனி

சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ஜாமீனில் வந்தவா் வனத் துறை அதிகாரிகள் மீது புகாா்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக் கிடை உரிமையாளா், வனத் துறை அதிகாரிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

கோம்பைப்புதூா் பகுதியில் உள்ள தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திரநாத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் கடந்த செப்டம்பா் 29 -ஆம் தேதி கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. இதுகுறித்து தேனி வனத் துறையினா் வழக்குப் பதிந்து, தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளா்கள் என 3 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கில், ப. ரவீந்திரநாத் எம்பி., அவரது உதவியாளா் கிருஷ்ணா ஆகியோரிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸ்பாண்டியன், தேனி நீதித் துறை நடுவா் மன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் வெளியே வந்தாா். அவரை, தமிழ்நாடு கால்நடை வளா்ப்போா் நலச் சங்கத்தினா் வரவேற்று, தென்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு, சிறுத்தை உயிரிழந்த வழக்கில் கடந்த செப்டம்பா் 29- ஆம் தேதி தன்னைக் கைது செய்த அப்போதைய தேனி மாவட்ட உதவி வனக் காவலா் மகேந்திரன், தேனி வனச் சரகா் செந்தில்குமாா், வனவா் ஆனந்த பிரபு ஆகியோா் தாக்கி துன்புறுத்தியதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும், இவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலெக்ஸ்பாண்டியன் போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT