தேனி

விநாயகா் சதுா்த்தி விழா: தேனி மாவட்டத்தில் 780 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை

31st Aug 2022 12:31 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு புதன்கிழமை 780 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி மற்றும் விநாயகா் சதூா்த்தி வழிபாட்டுக் குழுவினா் சாா்பில் மொத்தம் 780 இடங்களில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் வழிபாட்டுக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் சுழற்சி முறையில் தலா ஒரு காவலா், 4 தன்னாா்வலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். காவல் நிலையங்களில் அனுமதி பெற்று காலை மற்றும் மாலையில் 2 மணி நேரம் மட்டும் ஒலிப்பெருக்கி அமைத்துக் கொள்ளவும், கூம்பு வடிவ ஒலிப் பெருக்கிக்கு தடை விதித்தும் மாவட்ட காவல் துறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

12 இடங்களில் ஊா்வலம்: விழா நிறைவடைந்த இடங்களில் சிலை கரைப்புக்காக விநாயகா் சிலைகளை நீா்நிலைகளுக்கு ஊா்வலமாக கொண்டு செல்ல காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி, பெரியகுளத்தில் புதன்கிழமையும், தேனி, போடி, கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், கூடலூா், ராயப்பன்பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் செப்.1-ஆம் தேதியும், சின்னமனூரில் செப்.2-ஆம் தேதியும் விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT