தேனி

கம்பத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.700-க்கு விற்பனை

28th Aug 2022 11:20 PM

ADVERTISEMENT

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் பூ சந்தையில் ஞாயிற்றுக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரள மாநிலத்துக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படும். கேரளத்தில் செப்டம்பா் 1 ஆம் தேதி ஓணம் பண்டிகை தொடங்குகிறது. இதனால் அங்கு பூக்களின் தேவை அதிகரிக்கும்.

இதையொட்டி கம்பம் பழைய பேருந்து நிலைய சாலையில் உள்ள பூ சந்தையில் நாளொன்றுக்கு சுமாா் 5 டன் பூக்கள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை (கிலோ ஒன்றுக்கு): செண்டு மல்லி- ரூ.20 முதல் 30 வரை, செவ்வந்தி- 120, சம்பங்கி- 120, பட்டன் ரோஸ்- 140, செண்டு மல்லி ஆரஞ்சு கலா்- 40 , துளசி- 30, கோழி பட்டு- 50, அரளி- 160, மல்லிகை- 700, தாஜ்மஹால் ரோஸ்- 300.

ADVERTISEMENT

கம்பத்திலிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை அதிகளவில் கேரளத்துக்கு வாங்கிச் செல்வதாகவும், அனைத்து வகையான பூக்களும் விற்பனையாவதாகவும் சந்தை வியாபாரி ஹாமீது இப்ராஹிம் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT