போடி அரசு மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து புதிய கட்டடத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் குத்துவிளக்கேற்றி வைத்து பயன்பாட்டுக்குத் தொடக்கி வைத்தாா்.
பின்னா் பெண்கள் நலப்பிரிவில் உள்ள 15 படுக்கைகள், குழந்தைகள் நலப் பிரிவில் 10 படுக்கைகள், மருத்துவா், செவிலியருக்கான அறைகள் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஞா.து.பரிமளாதேவி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தங்க. தமிழ்செல்வன், போடி நகா்மன்றத் தலைவா் ச.ராஜராஜேஸ்வரி, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.