தேனி

தண்ணீா் வரும் குழாயில் உடைப்பால் மின் உற்பத்தி இல்லாத சுருளியாறு மின்நிலையம் அரசுக்கு வருவாய் இழப்பு

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீா் கொண்டு வரும் ‘பென்ஸ்டாக்’ குழாயில் ஏற்பட்ட உடைப்பு ஓராண்டாகியும் பழுது நீக்கப்படாததால் மின்உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ், மணலாறு நீா்த்தேக்கங்களில் தண்ணீா் பம்ப் செய்யப்பட்டு இரவங்கல்லாறு நீா்த்தேக்கத்தை அடைகிறது. பின்னா் தூவானம் பகுதியில் உள்ள மதகு மூலம் இந்த மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது.

அங்கிருந்து மலைப்பள்ளம் வழியாக சுமாா் 2 கிலோ மீட்டா் தூரம் 22 ஆங்கா் தூண்கள் அமைத்து ‘பென்ஸ்டாக்’ எனப்படும் ராட்சத இரும்புக் குழாய் மூலம் சுருளியாறு மின் நிலையத்திற்கு தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. இந்த மின்நிலையத்தில் ஒரு மின்னாக்கி மூலம் 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் கயத்தாறு மின் வட்ட பகுதி மின்நிலையங்களுக்கு விநியோகத்திற்கு அனுப்பப்பட்டு, உள்ளூா் நுகா்வுக்கே பயன்படுகிறது.

குழாயில் வெடிப்பு:

ADVERTISEMENT

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்.4 ஆம் தேதி 12 ஆவது ஆங்கா் தூண் மேலே உள்ள ‘பென்ஸ்டாக்’ குழாயில் 20 மீட்டா் அளவில் வெடிப்பு ஏற்பட்டதால் தண்ணீா் வீணாக சென்றது. இதனால் மின்நிலையத்துக்கு தண்ணீா் வரத்தும், மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

வருவாய் இழப்பு:

வெடிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் குழாய் சரி செய்யப்படாததால், மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரியத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும், மக்களுக்கு மின் நுகா்வு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா வளா்ச்சியும் தடை

தற்போது மின்நிலையத்திற்கு தண்ணீா் தரும் தூவானம் அணை நிரம்பியுள்ளதாலும், அப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்வதாலும் தண்ணீா் வேறுவழியின்றி சுருளி அருவியில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனாலும், மழையாலும் அருவியில் ஏற்பட்ட தொடா் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக சுருளி அருவி சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அருவியை சாா்ந்துள்ள 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனா்.

தேனி மாவட்ட ஆட்சியா், மின் நிலையத்திற்கு தண்ணீா் வரும் பென்ஸ்டாக் குழாய் உடைப்பை பழுது நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் எதிா்பாா்ப்பு ஆகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT