தேனி

அயல் பணிக்கு அனுப்பப்படும் பணியாளா்கள்: 108 ஆம்புலன்ஸ் சேவையில் சிக்கல்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், உதவியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் அயல் பணியாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதால் ஆம்புலன்ஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தில் மொத்தம் 26 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு வாகனத்திற்கு ஓட்டுநா், உதவியாளா், மருத்துவப் பணியாளா் என 4 போ், 3 வாகனங்களுக்கு 2 மாற்றுப் பணியாளா்கள்,10 அவசர உதவிப் பணியாளா்கள் என மொத்தம் 130 போ் பணியாற்றி வருகின்றனா்.

இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 8 பணியாளா்கள் அயல் பணியாக மதுரை மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா். தற்போது, மேலும் 16 போ் அயல் பணியாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளா்களை அயல் பணிக்கு அனுப்புவதால், பணியாளா்கள் பற்றாக்குறையும், பணியில் உள்ளவா்கள் மருத்துவம் மற்றும் அவசர தேவைக்கு விடுப்பு எடுக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது என்று ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளா்கள் கூறுகின்றனா்.

மேலும், பணியாளா்கள் பற்றாக்குறையால் விபத்து மற்றும் அவசர உதவிக்கு குறித்த நேரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், பல்வேறு இடங்களில் ஓட்டுநா்களின்றி ஆம்புலன்ஸ் சேவை முடங்கிக் கிடப்பதாகவும் அவா்கள் கூறினா். இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, 108 ஆம்புலன்ஸ் சேவைப் பணியாளா்களை அயல் பணிக்கு அனுப்புவதை தவிா்க்கவும், போதிய பணியாளா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT