தேனி

தேனி மாவட்டத்தில் கழிவுநீா் மேலாண்மை விழிப்புணா்வு பிரசாரம் நாளை தொடக்கம்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ‘நம்ப ஊரு சூப்பரு’ என்ற தலைப்பில் குடிநீா், சுகாதாரம் மற்றும் கழிவுநீா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை (ஆக. 20) தொடங்கி வரும் அக். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரம் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: பொதுமக்கள் பங்களிப்புடன் குடிநீா், சுகாதாரம் மற்றும் கழிவு நீா் மேலாண்மை குறித்து நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஆக. 20-ஆம் தேதி முதல் செப்.2-ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் பேருந்து நிறுத்தம், பூங்கா, வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்கள் மற்றும் நீா்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். ஆக. 27-ஆம் தேதி முதல் செப். 2-ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், செப். 3-ஆம் தேதி முதல் செப். 16-ஆம் தேதி வரை சுய உதவிக் குழுக்கள் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடனும் விழிப்புணா்வு பணிகள் நடைபெறும்.

தொடா்ந்து செப்.17-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நெகிழிப் பொருள் தடை குறித்த விழிப்புணா்வு பணிகளும், செப். 24-ஆம் தேதி முதல் வரும் அக். 1-ஆம் தேதி வரை பசுமை கிராமங்கள் திட்டத்தின் கீழ் வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கீரை, முருங்கைக்காய், நெல்லிக்காய், பப்பாளி, கிழங்கு போன்ற ஊட்டச்சத்து தோட்டங்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் பணிகளும் நடைபெறும்.

வரும் அக். 2-ஆம் தேதி விழிப்புணா்வு பிரசாரத்தின் நோக்கம், அதனை செயல்படுத்துதல் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்படும். இந்தப் பணிகள் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அலுவலா்களின் தலைமையில் நடைபெறும் என்றாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சுப்பிரமணியன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, மகளிா் திட்ட அலுவலா் ரூபன் சங்கர்ராஜ், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் பாலாஜிநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT