பெரியகுளம் நகராட்சி அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி பெரியகுளம் பகுதியில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் நகரில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி அவசரக்கூட்டம் பெரியகுளம் நகா்மன்றத்தலைவா் சுமிதா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரியகுளம் பகுதியில் சுதந்திரதின விழா பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற வேண்டும் என தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தெரிவித்தனா். இதற்கு அதிமுக மற்றும் பல்வேறு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
பெரியகுளத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் எம். ராஜபாண்டியன் கூறியதாவது: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின நிறைவு விழாவினையொட்டி நாடே கொண்டாடி வருகிறது. அதன் ஓரு பகுதியாக பெரியகுளம் பகுதியில் பதாகை வைத்துள்ளனா். இதனை அகற்ற நகா் மன்றக் கூட்டத்தில் விவாதிப்பது வேதனையளிக்கிறது. பெரியகுளம் நகா்ப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக மூன்றாந்தல், பழையபேருந்து நிலையப் பிரிவு, திருவள்ளுவா் சிலைப்பகுதியில் தொடா்ந்து பதாகை வைத்து வருகின்றனா். அதனை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நகராட்சி நிா்வாகம், சுதந்திரதின விழா பதாகையை அகற்ற முனைப்பு காட்டுவது வேதனையளிக்கிறது என்றாா்.