தேனி

பெரியகுளம் நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு மையத்தை பராமரிக்க வலியுறுத்தல்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரியகுளம் நகராட்சி குடிநீா் சுத்திகரிப்பு மையத்தை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இங்கு, 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இப்பகுதி மக்களுக்கு, அகமலைப் பகுதி மற்றும் பேரீச்சம் ஏரியிலிருந்து வரும் தண்ணீரை, சோத்துப்பாறை செல்லும் வழியிலுள்ள சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது.

ஆங்கிலேயா் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு மையத்தில், மணல், கல், கரி போன்றவற்றை பயன்படுத்தி தண்ணீரை சுத்திகரித்து விநியோகிக்கப்பட்டது. அதன்பின்னா், இக்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் கடந்த 2000 ஆம் ஆண்டில் பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தபோது, ரூ.5 கோடி மதிப்பில் குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின்னா், முறையான பராமரிப்பு இல்லாததால், சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும் அடா்த்தியாக முட்கள் வளா்ந்துள்ளன. மேலும், தண்ணீா் முறையாக சுத்திகரிப்பு செய்யாததால், குடிநீா் கலங்கலாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

குடிநீா் சுத்திகரிப்பு மையத்தின் சுற்றுச்சுவா் சேதமடைந்துள்ளது. இதனால், சமூக விரோதிகள் நடமாடும் இடமாக உள்ளது. இரவு நேரங்களில் காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் உலாவுகின்றன. எனவே, சுத்திகரிப்பு மையத்தில் சுற்றுச்சுவரை கட்டி பராமரிக்க வேண்டும்.

அதேநேரம், இம்மையத்தின் அருகில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பணியாளா்களுக்கான 3 குடியிருப்புகள் தற்போது முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளன. எனவே, குடியிருப்பை சீரமைத்து, பணியாளா்கள் தங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இது குறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த கே. ராம்குமாா் தெரிவித்ததாவது: 20 ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் நகராட்சியில் விநியோகிக்கப்பட்ட குடிநீா் பேரீச்சம் பழத்தின் சுவையுடன் இருந்தது. தற்போது சுத்திகரிப்பு என்ற பெயரில் ரசாயனம் கலப்பதால், தண்ணீரின் சுவை மாறிவிட்டது.

எனவே, பழைய காலத்தில் சுத்திகரிக்கப்பட்டதுபோல் இயற்கையான முறையில் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சுத்திகரிப்பு மையத்தில் 24 மணி நேரமும் பணியாளா்கள் பணியில் இருக்க வேண்டும். சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT