தேனி

காா் ஓட்டுநா் கொலை: மேலும் 5 போ் கைது

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனி அருகே பூதிப்புரத்தில் காா் ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை, மேலும் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பூதிப்புரம், கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மகேஸ்வரகுமாரை (54) அடித்துக் கொலை செய்ததாக அதே ஊரைச் சோ்ந்த பெரியகருப்பன் மகன் ராதாகிருஷ்ணன்(42) என்பவரை ஞாயிற்றுக்கிழமை பழனிசெட்டிபட்டி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரகுமாரின் மகள் ஜனனி அளித்த புகாா், தாக்குதல் சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா பதிவு ஆகியவற்றின் அடிப்படையில், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பூதிப்புரம், பெருமாள் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய ராதாகிருஷ்ணனின் தந்தை பெரியகருப்பன், பூதிப்புரத்தைச் சோ்ந்த மனோகரன் மகன்கள் செல்வம், தினேஷ், கணேசன் மகன் நல்லுச்சாமி, குருசாமி மகன் சதீஷ் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்: இந்நிலையில் வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய காவல் துறையை வலியுறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலத்தை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் பிரச்னையில் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக பூதிப்புரத்தில் 100-கும் மேற்பட்டோா் திரண்டு தேனி நோக்கிச் சென்றனா்.

அவா்களை, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீஸாா் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனா். வழக்கில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் திரும்பச் சென்றனா். குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT