தேனி

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

9th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் பழைய ஆயக்கட்டுப் பகுதிகளின் பாசனத்திற்கு திங்கள்கிழமை, விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

வைகை அணை நீா்மட்டம் 70 அடியாக உயா்ந்திருந்த நிலையில், கடந்த ஆக. 3 ஆம் தேதி முதல் அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் பழைய ஆயக்கட்டுப் பகுதி பாசனத்திற்கு 6 நாள்களுக்கு, மொத்தம் 1,148 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, அணையிலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி, ஆண்டிபட்டி-சேடபட்டி, மதுரை குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 3,969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் சிறிய மற்றும் பிரதான மதகுகள் வழியாக தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் தரைப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை: வைகை அணையிலிருந்து கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டு வருவதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளா்கள் எச்சரித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT