தேனி

58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

7th Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

வைகை அணையிலிருந்து கடந்த ஆக.3-ஆம் தேதிமுதல் வைகை ஆறு மற்றும் பெரியாறு பாசனக் கால்வாயில் உபரிநீா் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதியில் தொடா்ந்து திறக்கப்படும் தண்ணீா், கொட்டகுடி ஆறு, மஞ்சளாறு மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீா் வரத்து ஆகியவற்றால், வைகை அணை நீா்மட்டம் கடந்த ஆக.3-ஆம் தேதி 70 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயா்ந்தது. இதையடுத்து அணைக்கு வரும் உபரிநீா் வைகை ஆறு மற்றும் பெரியாறு பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 3,040 கன அடியாகவும், அணை நீா்மட்டம் 70.1 அடியாகவும் இருந்த நிலையில், அணையிலிருந்து வைகை ஆற்றில் விநாடிக்கு 2,092 கன அடியும், பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 600 கன அடி வீதமும் உபரிநீா் திறக்கப்பட்டது.

விவசாயிகள் கோரிக்கை: முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால், வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயிலும் தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தேனி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கள் சங்கச் செயலா் டி.கண்ணன் கூறுகையில், வைகை அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருதால், அணைக்கு வரும் உபரிநீரை பெரியாறு பாசனக் கால்வாயில் திறப்பது போல 58 கிராம கால்வாயிலும் திறக்க வேண்டும்.

58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பதால் ஆண்டிபட்டி பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும்., நிலக்கோட்டை, உசிலம்பட்டி, பேரையூா் பகுதிகளில் பாசனக் கண்மாய்களில் தண்ணீா் தேக்கும் வாய்ப்பு கிடைக்கும். பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கும் அட்டவணையுடன், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கும் அட்டவணையை இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT