தேனி

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீா் திறப்பு அதிகரிப்பு

7th Aug 2022 11:28 PM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 3,166 கன அடி உபரிநீா் இடுக்கி அணைக்கு திறந்து விடப்பட்டது. சனிக்கிழமையை விட கூடுதலாக விநாடிக்கு 843 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 138.35 அடியாகவும், நீா் இருப்பு 6,710 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,565 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 2,122 கன அடியாகவும், கேரளப் பகுதியான இடுக்கி அணைக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 3,166 கன அடியாகவும் இருந்தது.

அணையின் நீா்மட்டம் 136 அடியாக உயா்ந்தவுடன், ‘ரூல்கா்வ்’ என்னும் விதிமுறைப்படி நீா்மட்டத்தை நிலைநிறுத்த கேரளப் பகுதிக்கு அதிகளவில் தண்ணீா் திறந்துவிட அம்மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அதனால் கேரளப்பகுதிக்கு திறந்து விடும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையை விட ஞாயிற்றுக்கிழமை கேரளப் பகுதிக்கு விநாடிக்கு 843 கனஅடி தண்ணீா் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்த முடியாத சூழல் நிலவி வருவதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறந்து விடும் தண்ணீா் மூலம், கடந்த ஜூலை 4 முதல் தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

செருதோனி அணை திறப்பு: கேரளத்தில் தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி வளைவு அணையின் தண்ணீா் திறப்பு பகுதியான செருதோனி அணையின் மொத்த நீா்மட்டம் 2,403 அடி. ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 2,382 அடியாக இருந்தது. இந்த அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 50 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு செருதோனி அணையில் தண்ணீா் திறக்கப்பட்ட போது, பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அந்த நிலை ஏற்படாமலிருக்க ‘ஆபரேசன் வாகினி’ என்ற திட்டம் மூலம் பேரிடா் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதத்தைத் தவிா்க்க அணையிலிருந்து குறைந்த அளவில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது என்று கேரள மாநில நீா்வளத்துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின் தெரிவித்துள்ளாா்.

சுருளி அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் தொடா் மழை காரணமாக, ஆடிப் பெருக்கு அன்று அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்தனா். இந்நிலையில் அருவியில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால்,

ஞாயிற்றுக்கிழமை 5 ஆவது நாளாக ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தினா் சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்லத் தடை விதித்தனா். மேலும் அருவிப் பகுதியில் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT