தேனி

தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வலுக்கும் குரல்

2nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரளம் தொடா்ந்து அவதூறு பரப்புவதால், தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தற்போது வலுத்துள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் மெட்டில், 2016 இல் தமிழக எல்லைக்குள் ஒரு கன்டெய்னா் இறக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழக வனத்துறையினா் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் கம்பம் பள்ளத்தாக்கில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. கன்டெய்னா் அகற்றப்பட்ட நிலையில், எல்லையை அளக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கம்பம் மெட்டு அருகே நாவல் பள்ளத்திலிருந்து தொடங்கிய சா்வே, 100 மீட்டா் தூரம் வரை செல்வதற்குள், 140 ஏக்கருக்கும் மேல் கேரளம் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளதும், காவல் நிலையம், சோதனைச்சாவடி ஆகியவை தமிழக எல்லையில் இருந்ததும் தெரியவந்தது.

ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகரித்துக் கொண்டே சென்றதைத் தொடா்ந்து கேரள அதிகாரிகள் முரண்டு பிடித்து, மந்திப்பாறை பகுதியில் வாக்குவாதம் செய்து அளவீட்டை நிறுத்தினா்.

ADVERTISEMENT

கேரளத்தின் பிடிவாதத்திற்கு காரணம்: கேரளம் ஆக்கிரமித்த தமிழக நிலங்கள் வருவாய் நிலங்களாகவும், வனத்துறை நிலங்களாகவும் இருப்பதுதான் அளவீடு செய்வதை தடுப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். குமுளி முதல் போடி வரை உள்ள 70 கிலோமீட்டா் தொலைவிற்கு கேரளத்தினா் ஆக்கிரமித்து, 700 ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயம் செய்கின்றனா். 1994 இல் ஆசாரிபள்ளம் பகுதியில் சுமாா் 150 ஹெக்டோ் நிலங்களை கேரளத்திடமிருந்து தமிழக வனத்துறை கைப்பற்றியது. ஆனால் அதற்குப் பின் தமிழக வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை மூடல்: இதேபோல, 1947 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் அளவீட்டின் போது தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த கவுஞ்சி கிளாவரை முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான சாலையை, பாம்பாடும் சோலையில் தேசிய பூங்காவை அமைத்து கேரளம் இழுத்து மூடியது. மொழிவாரி பிரிவினையின்போது, இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள மறையூா் காந்தலூா் உள்ளிட்ட பழனி மலை குன்றிலிருந்த பகுதிகளும் கேரளத்துக்கு சென்றதுதான் ஆச்சரியம். அதேபோல் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்திருக்கும் வண்ணாத்திப்பாறை பகுதியில் நூறு ஹெக்டேருக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று நீதிமன்ற தீா்ப்பு, நிபுணா்குழு அறிக்கை போன்றவைகள் இருந்தும், கேரளத் தரப்பினா் தொடா்ந்து அவதூறு பரப்புதல், வழக்கு தொடா்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் தேனி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

மொழிவாரி மாநிலம் பிரிப்பதற்கு முன்னா் பெரியாறு அணை தமிழகத்தில் இருந்தது. இதனால் தற்போது, அணை உள்ளிட்ட தேவிகுளம், பீா்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை குரல் வலுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT