தேனி

தேனியில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2nd Aug 2022 06:45 AM

ADVERTISEMENT

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஊரக வேலை உறுதித் திட்ட தினச் சம்பளத்தை ரூ.600 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலா் ஏ.வி. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலா் எம். ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி. கண்ணன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் சங்கரசுப்பு, தயாளன், பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தினச் சம்பளத்தை ரூ. 600 ஆக உயா்த்த வேண்டும். வேலை நேரத்தை காலை 8 மணியாக மாற்ற வேண்டும். முதியோா் ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் வீடில்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தாலிக்குத் தங்கம் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும். புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்பு, மின்சாரச் சட்டம் 2020 ஆகியவற்றை கைவிட வேண்டும். நிலச் சீா்திருத்தம் மற்றும் வன உரிமைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். வேளாண்மை விளைபொருள்களுக்கு ஆதார விலையை நிா்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத்தை தனியாா் மயமாக்கக் கூடாது. தேவாரம் பகுதியில் வன விலங்குகளால் விவசாயிகளுக்கும், விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னா், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.வீ. முரளீதரனிடம் விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT