தேனி

தேனி மாவட்ட எல்லையில் முதல்வருக்கு வரவேற்பு

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

தேனியில் சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தேனி ஆண்டிபட்டி அருகே கணவாய் சாலையில் வெள்ளிக்கிழமை, திமுக தேனி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி-பெரியகுளம் புறவழிச்சாலை, அன்னஞ்சி விலக்கு அருகே சனிக்கிழமை (ஏப்.30) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்று, மாவட்டத்தில் முடிவடைந்த பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேச உள்ளாா். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு, மதுரையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு முதல்வா் வருகை தந்தாா்.

அவருக்கு ஆண்டிபட்டி அருகே கணவாய் சாலையில் திமுக தேனி தெற்கு மாவட்டச் செயலரும், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.ராமகிருஷ்ணன் தலைமையில் அக் கட்சியினா் பூங்கொத்து அளித்து வரவேற்றனா். ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், திமுக முன்னாள் மாவட்டச் செயலா் எல்.மூக்கையா, போடி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல்வருடன் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, மூா்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் வந்திருந்தனா்.

ADVERTISEMENT

காவலா் குடியிருப்பில் ஆய்வு: ஆண்டிபட்டியில் காரிலிருந்து இறங்கிய முதல்வா், பேருந்து நிலையம் அருகே உள்ள காவலா்கள் குடியிருப்புக்குச் சென்றாா். அங்கிருந்த காவலா்களின் குடும்பத்தினா் முதல்வரை வரவேற்றனா். காவலா்களின் குடியிருப்புக்குள் சென்ற முதல்வா், அங்கு அடிப்படை வசதிகளை பாா்வையிட்டாா். குடியிருப்பில் இருந்த காவலரின் குடும்பத்தினா் முதல்வரை உணவருந்த அழைத்தனா். குடிக்கத் தண்ணீா் மட்டும் கொடுங்கள் என்று கேட்டு தண்ணீா் வாங்கி அருந்திய முதல்வா், காவலா்கள் குடும்பத்தினரிடம் விடைபெற்றுச் சென்றாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி திறந்து வைத்த ஆண்டிபட்டி காவலா்கள் குடியிருப்பில், அவரது பெயரை குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை முதல்வா் பாா்வையிட்டாா். பின்னா், முதல்வா் மற்றும் அமைச்சா்கள் வைகை அணையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்றனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT