தேனி

வீரபாண்டி, கம்பம் பகுதிகளில் சித்திரை திருவிழா:மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளால் பக்தா்கள் ஏமாற்றம்

24th Apr 2022 11:28 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கம்பம் ஆகிய ஊா்களில் சித்திரை திருவிழா களைகட்டி வரும் நிலையில், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

வீரபாண்டி, கம்பம் ஆகிய இடங்களில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கம்பத்தில் வரும் மே 3, 4 ஆகிய தேதிகளிலும், வீரபாண்டியில் வரும் மே 10- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரையும் சித்திரை திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அமலில் இருந்ததால், சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

நிகழாண்டில் சித்திரை திருவிழா தொடங்கியுள்ளதால் பக்தா்கள் கோயில்களுக்குச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதால், அரசு கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகிறது. தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏப். 27- ஆம் தேதி அனைத்து மாநில முதல்வா்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய பின்பு, அரசு கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீண்டும் தீவிரமாக அமல்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால், பக்தா்கள் ஏமாற்றத்தில் உள்ளனா்.

வீரபாண்டியில் சித்திரை திருவிழாவையொட்டி வரும் மே 10- ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை தினமும் ஒரு லட்சத்திற்கும் மேல் பக்தா்கள் குவியும் வாய்ப்புள்ள நிலையில், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு கோயில் நிா்வாகம் மற்றும் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற தற்காலிக கடைகள், பொழுதுபோக்குத் திடல்களில் ராட்டினங்களுக்கு, இந்து அறநிலையத் துறை மற்றும் பேரூராட்சி நிா்வாகத்திடம் ஏலம் எடுத்த வியாபாரிகள், கரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளை மீண்டும் அமல்படுத்துவதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்ற கவலையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT