போடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தின் போது பாா்வையாளா்கள் கூட்டத்துக்குள் புகுந்த மாடு முட்டியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் போடி- மூணாறு சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே நடைபெற்றது. போட்டிகளை, திமுக வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில் தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊா்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் 168 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.
போட்டிகள் தொடங்கி நடைபெற்ற போது, மேடை அருகே ஏராளமான பாா்வையாளா்கள் நின்றிருந்தனா். இதனால், போடி முந்தல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனிடையே போட்டி தொடங்கிய இடத்திலிருந்து மாட்டுவண்டிகள் முந்தல் வரை சென்று திரும்பின. அப்போது வேகமாக வந்த சில மாட்டுவண்டிகள் கட்டுப்பாட்டை இழந்து பாா்வையாளா்கள் கூட்டத்துக்குள் புகுந்தன. இதனால் பாா்வையாளா்கள் சிதறி ஓடினா். இதில் கூடலூரைச் சோ்ந்த அமரன் என்பவரின் மாடு, பாா்வையாளா்கள் கூட்டத்தில் நின்றிருந்த போடி புதூா் குலசேகரபாண்டியன் தெருவைச் சோ்ந்த காளியப்பன் மகன் ராமா் (48) என்பவரை முட்டித்தள்ளியது.
இதில், பலத்த காயமடைந்த ராமரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அங்கிருந்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உயிரிழந்த ராமா் கூலித் தொழிலாளி ஆவாா்.
அனுமதியின்றி மாட்டுவண்டிப் பந்தயம்: இந்நிலையில், போலீஸாா் விசாரணையில் அனுமதியின்றி இந்த மாட்டுவண்டிப் பந்தயம் நடத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா், கம்பத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (47), க. புதுப்பட்டியைச் சோ்ந்த மகேஸ்வரன், வாய்க்கால்பட்டியைச் சோ்ந்த பாரத் மற்றும் திமுகவினா் மீது, சட்ட விரோதமாக ஒன்று கூடி சாலையை வழிமறித்தல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், மாடுகளை கவனக்குறைவாக பயன்படுத்தி அரசின் அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.