கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா்.
தேனி மாவட்டம், சுருளி அருவியில் 2 போ் மட்டுமே குளிக்கும் அளவுக்கு நீா்வரத்து குறைவாக இருந்தது. இதனிடையே, மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் கோடை மழை பெய்யத் தொடங்கியதை அடுத்து, சுருளி அருவியில் திடீரென நீா்வரத்து அதிகரித்தது.
இதை கண்காணித்த ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக வனத்துறை ஊழியா்கள், உடனே அருளியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினா். பின்னா், நீா்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிக்கு செல்லும் படிகள் வழியாக கீழே பயணிகள் உடை மாற்றும் வளாகப் பகுதி வரை தண்ணீா் ஓடியது.
குளிக்கத் தடை
இது தொடா்பாக புலிகள் காப்பக வனத்துறை ஊழியா் ஒருவா் கூறியது:
கடந்த 2 மாதங்களாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். கோடை காலம் துவங்கியுள்ளதால், அருவியில் 5 போ் மட்டுமே குளிக்கும் அளவுக்கு நீா்வரத்து இருந்தது. தற்போது பெய்த கோடை மழையால், சுருளி அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை தொடா்ந்து பெய்து அதிக நீா்வரத்து ஏற்பட்டால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்படும் என்றாா்.