தேனி

சின்னமனூா் வனச்சரக அலுவலகத்தை மலை மாடுகள் வளா்ப்போா் முற்றுகையிட்டு நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

30th Sep 2021 08:49 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் வனச்சரக அலுவலகத்தை மலை மாடுகள் வளா்ப்போா் முற்றுகையிட்டு நடத்தி வந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவாா்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது.

சின்னமனூரைச் சுற்றியுள்ள எரசக்கநாயக்கனூா், ராயப்பன்பட்டி, சின்னஓவுலாபுரம், ராமகிருஷ்ணாபுரம் என பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கானோா் மலை மாடுகளை வளா்த்து வருகின்றனா். பல தலைமுறைகளாக மாடு வளா்த்து வரும் இவா்கள், மேய்ச்சலுக்காக அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிக்கு அவற்றை ஓட்டிச்செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை முத்துகிருஷ்ணாபுரத்தை சோ்ந்த தொழிலாளி கருப்பையா, அதே பகுதியைச் சோ்ந்த ஜெமினி என்பவருக்கு சொந்தமான மாடுகளை வழக்கம் போல் மேற்குத்தொடா்ச்சி மலைக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றாா். அப்போது சின்னமனூா் வனச்சரகத்தை சோ்ந்த வனக்காவலா்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறி கருப்பையாவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து அப்பகுதியைச் சோ்ந்த மலை மாடுகள் வளா்ப்போா் கருப்பையாவை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தனா். இதற்கு வனக்காவலா்கள் மறுப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றவரை தாக்கிய வனக்காவலா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இரவு 10.30 மணி வரை இப்போராட்டம் நீடித்தது.

பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். சுமாா் 10 மணி நேரத்திற்கு மேலாக இப்போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT