தேனி

தேனி மாவட்டத்திற்கு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி : ஆட்சியா் தகவல்

26th Sep 2021 12:16 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட அரசு பல்துறை பெருந்திட்ட வளாகத்தில் வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுலகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சாா்பில் நடைபெற்ற ஏற்றுமதி வழிகாட்டும் கருத்தரங்கை தொடங்கி வைத்து அவா் பேசியது: தேனி மாவட்டத்திலிருந்து அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி நூல், மெத்தை, தலையணைகள், ஆயத்த ஆடைகள், காட்டன் சாக்ஸ், தென்னை நாா் பொருள்கள், மசாலா பொடி, நறுமணப் பொருள்கள், காபி ஆகியவைகளும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரப்பா் பொருள்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. மாவட்டத்தில் உற்பத்தியாகும் வேளாண்மை விளைபொருள்களை மதிப்புக் கூட்டுப் பொருள்களாக தயாரித்து சா்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்றாா்.

முன்னதாக, மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் அரசு மானிய உதவியாக 17 தொழில்முனைவோருக்கு மொத்தம் ரூ.20.24 லட்சத்தை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த கருத்தரங்கில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமசுப்பிரமணியன், பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் ஆறுமுகம், வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன், தோட்டக் கலை துணை இயக்குநா் பாண்டி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அகிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT