தேனி

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 3 கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்காததால் பொதுமக்கள் அவதி

26th Sep 2021 12:17 AM

ADVERTISEMENT

சின்னமனூா் அருகே ஹைவேவிஸ் மலைப் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் 3 கிராமங்களை புறக்கணிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளது. இங்கு மேகமலை, மணலாா், மேல் மணலாா், ஹைவேவிஸ், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு என 7 மலைக் கிராமங்களில் 8 ஆயிரம் போ் வசிக்கின்றனா். சின்னமனூரிலிருந்து இரவங்கலாா் வரையில் 52 கிலோ மீட்டா் தூரம் வரையில் சாலை வசதி உள்ளது. இப்பகுதிக்கு 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இப்பேருந்துகள் மேகமலை, ஹைவேவிஸ், மணலாா்,மேல் மணலாா் வரை மட்டுமே செல்கின்றன. மீதமுள்ள வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு ஆகிய 3 மலைக்கிராமங்களில் சாலைப்பணிகள் நடைபெறுவதால் கடந்த 2 ஆண்டுளாக அரசுப் பேருந்துகள் இப்பகுதிக்கு இயக்கப்படுவதில்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: கடந்த 2 ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் நடைபெறுவதை காரணம் கூறி அரசுப் பேருந்துகளை 3 கிராமங்களுக்கு இயக்காமல் அரசு போக்குவரத்துக் கழகம் புறக்கணித்து வருகிறது. ஆனால் அதே சாலையில் தனியாா் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன என்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து தேயிலைத்தோட்டத் தொழிலாளா்கள் சங்கப்பிரதிநிதி முத்தையா கூறியது: அரசுப்பேருந்துகள் திட்டமிட்டு 3 கிராமங்களை புறக்கணிப்பதால் பள்ளி மாணவா்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக போக்குவரத்துக் கழக நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை. அதே சாலையில் சுற்றுலா வாகனங்கள், தனியாா் தேயிலை தொழிற்சாலைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் என அனைத்து கனரக வாகனங்களும் இயக்கப்படுகின்றன என்றாா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் அரசுப்பேருந்துகளை அனைத்து மலைக் கிராமங்களுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT