தேனி

கம்பம்மெட்டு மலைச் சாலையில் பாறை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

23rd Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு மலைச் சாலையில் தொடா் மழை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்ததால், வெள்ளிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கம்பத்திலிருந்து கேரள மாநிலத்தை இணைக்கும் கம்பம்மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்தச் சாலையில் நாள்தோறும் விவசாயம் மற்றும் வணிக ரீதியாக 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏலக்காய் தோட்ட கூலி தொழிலாளா்கள் இச்சாலை வழியாக இடுக்கி மாவட்டத்துக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளிக்கிழமை திடீரென கம்பம்மெட்டு மலைச் சாலையின் ஆறாவது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் சரிந்து விழுந்தன.

இது குறித்து அவ்வழியாகச் சென்ற உத்தமபாளையம் வட்டாட்சியா் அா்ஜூனன், நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்தாா். தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, மலைச் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்தாா். அப்பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததில், சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT