தேனி

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்தல் அதிகரிப்பு

21st Oct 2021 08:34 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருள்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருவதால், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கம்பம் பகுதி ரேஷன் கடைகளில் இருந்து கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கம்பமெட்டுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் அரிசியை மாவாக மாற்றியும் கடத்துகின்றனா். இது தொடா்பாக கம்பத்தைச்சோ்ந்த பெண் உள்பட 5 போ் மீது 20-க்கும் மேலான வழக்குகள் பதிந்துள்ளனா். இதுபோல், கஞ்சா, எம்.சாண்ட், மணல் ஆகியவற்றை நாளொன்றுக்கு 50 -க்கும் மேலான டிப்பா் லாரிகளில், போலி அனுமதி சீட்டு, ஒரே சீட்டு மூலம் பல டிரிப்புகள் என கேரளாவுக்குள் கடத்துகின்றனா். கடந்த வாரம் எம்.சாண்ட் கடத்திய 2 டிப்பா் லாரிகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் விளையும் கஞ்சாவை ரயில் மூலம் திண்டுக்கல் வரை கொண்டு வந்து, வாகனம் மூலம் கம்பத்தில் இருப்பு வைத்து, கேரளாவுக்கு கடத்தி, கிலோ 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடா்பான வழக்குகளில் சிக்கிய 20-க்கும் மேலானவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தும், அவா்களிடம் கஞ்சா விற்பனை செய்யக்கூடாது என்று விழிப்புணா்வு ஏற்படுத்தியும் கஞ்சா கடத்தல் கட்டுப்படாமலேயே உள்ளது.

தற்போது கம்பத்திலிருந்து கேரளாவுக்கு தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் அதிக அளவில் கடத்தப்படுகின்றன. கம்பத்துக்கு கண்டெய்னரில் வரும் சரக்குகளை 5 மொத்த வியாபாரிகள் பிரித்துக்கொள்வதாகவும் தமிழகத்தில் ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கும், கேரளாவில் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. கேரளாவுக்கு கடத்திச் செல்ல எளிதான மலைச்சாலை வசதி உள்ளதால் போதைப்பொருள் கடத்தலுக்கு கம்பம் நகரை முக்கிய கேந்திரமாக பயன்படுத்தி வருகின்றனா்.

மாவட்ட காவல், வருவாய்த் துறையினா் கம்பமெட்டு மற்றும் குமுளி மலைப்பாதைகளில் கவனம் செலுத்தி, சோதனைச்சாவடிகள் அமைத்து கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT