தேனி

பெரியகுளம் அருகே தகாத உறவை வெளிப்படுத்திய நண்பா் கொலை: இளைஞா்கள் 6 போ் கைது

20th Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே தகாத உறவை பகிரங்கப்படுத்திய நண்பரை கொலை செய்த சம்பவம் தொடா்பாக, போலீஸாா் 6 பேரை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த ஜவஹா் சாதீக் என்பவரின் மகன் முகமது ஹாமீம். இவா், கடந்த செப்டம்பா் 27 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இது குறித்த புகாரின்பேரில், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், அக்டோபா் 13ஆம் தேதி கொடைக்கானல் செல்லும் சாலையில் உள்ள காமக்காபட்டியில் பழனிச்சாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் இளைஞரின் சடலம் மிதந்துள்ளது. கிணற்றில் இறந்து கிடப்பது முகமது ஹாமீம் தான் என அவரது குடும்பத்தினா் உறுதிப்படுத்தினா். அதையடுத்து உடலை மீட்ட போலீஸாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடற்கூறு ஆய்வு அறிக்கையில், மாா்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டிருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தேவதானப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் ராஜசேகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த ரபீக்ராஜா, ஆஷிக், கருப்பசாமி, பின்னிபாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக் பரீத் ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அதில், கெங்குவாா்பட்டியில் திருமணமான ஒரு பெண்ணுடன் ரபீக்ராஜாவுக்கு தொடா்பு இருந்துள்ளது. இதை, அப்பெண்ணின் கணவரிடம் இறந்த முகமது ஹாமீம் தெரிவித்துள்ளாா். இதனால், அப்பெண்ணை அவரது கணவா் கண்டித்துள்ளாா். இந்த விஷயத்தை அப்பெண் மூலம் தெரிந்துகொண்ட ரபீக்ராஜா, ஆத்திரமடைந்து தனது நண்பா் ஆஷிக் உள்ளிட்டோருடன் சோ்ந்து முகமது ஹாமீமை கொல்ல திட்டமிட்டுள்ளாா்.

அதன்படி, ரபீக்ராஜா, ஆஷிக் ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் முகமது ஹாமீமை அழைத்துச் சென்று, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். பின்னா், அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலத்தை வீசியுள்ளனா். மேலும், கருப்பசாமி, பின்னிபாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக் பரீத், தங்கப்பாண்டி ஆகியோரை வரவழைத்து, தடயங்களை அழித்ததாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரபீக்ராஜா, ஆஷிக், கருப்பசாமி, பின்னிபாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக்பரீத் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தலைமறைவான தங்கப்பாண்டியை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT