தேனி

நீா்வரத்துக் கால்வாய்களில் தடுப்பணை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைவு; விவசாயிகள் புகாா்

DIN

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் முக்கிய நீா்வரத்துக் கால்வாய்களின் குறுக்கே கேரள அரசு திட்டமிட்டு தடுப்பணை கட்டியுள்ளதால், அணைக்கு நீா்வரத்து குறைந்ததுவிட்டதாக 5 மாவட்ட விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேற்கு மலைத் தொடா்ச்சியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் பெய்யும் மழைநீரே, முல்லைப் பெரியாறு அணைக்கு அதிகளவில் வந்து சோ்கிறது. பருவமழைக் காலங்களில் சராசரியாக 5 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் நீா்வரத்து இருக்கும். இதன் மூலமாகவே தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீா் மற்றும் விவசாயத் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.

இந்த சிவகிரி மலையானது, தமிழக வனத்துறைக்கு உள்பட்டது என்றாலும், மழைநீா் வடிகால்வாய்கள் அனைத்தும் கேரள வனப்பகுதி வழியாகவே முல்லைப் பெரியாறு அணையைச் சென்றடைகிறது.

எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்தை குறைக்கும் நோக்கில், கேரள அரசு பல்வேறு இடையூறுகளை செய்துவருகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணையை கட்டவேண்டும் என்ற நோக்கிலும் திட்டங்களை தீட்டி வருகிறது.

இது குறித்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினா் தெரிவித்ததாவது: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தும், அணைக்கு நீா்வரத்தானது 2000 கனஅடிக்கும் குறைவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்வரத்துக் கால்வாய்களில் தடுப்பணைகளை அமைத்து, அந்த நீரை வண்டிப்பெரியாறு கம்பி பாலம் வழியாக இடுக்கி அணைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இடுக்கி அணையில் 74 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீா் தேக்கப்படுகிறது. இந்த ராட்சத அணையிலிருந்து நாள்தோறும் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் இந்த அணை தண்ணீா் மூலம் 1 ஏக்கா் அளவில் கூட விவசாயம் செய்யப்படவில்லை. ஆனால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், 5 மாவட்டங்களைச் சோ்ந்த 1 கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீா்வரத்து கால்வாய்களில் கட்டப்பட்டுள்ள கெவி அணை, கட்ச் அணை, பம்பா அணை, சபரிகிரி அணை ஆகியவற்றை அகற்றிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT