தேனி

குமுளி-கோட்டயம் சாலையில் நிலச்சரிவு: 10 பேர் மாயம்: போக்குவரத்துக்கு தடை

16th Oct 2021 08:21 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டம் குமுளி-கோட்டயம் சாலையில் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும் முண்டக்கயம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் 10 பேரை காணவில்லை என்றும், 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழக-கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டம் அருகே இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே பலத்த மழை பெய்து வந்தது. 115 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவு பதிவான நிலையில் குமுளி கோட்டயம் சாலையில் முண்டக்கயம் ஆற்றுப்பாலம் நிரம்பி மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

ADVERTISEMENT

மேலும் இப்பகுதியில் நிலச்சரிவு எற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களை பிரிக்கும் முண்டக்கயம் ஆற்று பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் பலத்த மழைப்பொழிவால் இடுக்கி மாவட்டம் முண்டக்கயம் அருகே கூட்டிக்கல் என்ற கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஓடும் கோக்கையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குமுளி அருகே முண்டக்கயம் பாலத்தை மூழ்கி செல்லும் கோக்கையாறு

இதில், பிளப்பள்ளியைச் சேர்ந்த கிளாரம்மா ஜோசப்(65), அவரது மருமகள் சின்னி(35), பேத்தி சோனா(10) ஆகிய  3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கோட்டயம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

நிலச்சரிவில் ஏற்பட்டுள்ள பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வாசவன் தலைமையில் 60 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் பி.கே.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்

மேலும் பலத்த மழை காரணமாக தேக்கடியில் சனிக்கிழமை காலையில் 9 மணிக்கு முதல் படகு சவாரி இயக்கப்பட்டது. பின்னர் அதனைத்தொடர்ந்து, படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது, மேலும் இரவு நேரங்களில் இடுக்கி மாவட்டத்திற்குள் போக்குவரத்து இயங்க அக்.21 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளமான முண்டக்கயம் - வாகமண் வனத்துறை சாலையில் அதிக நிலச்சரிவு எற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : theni தேனி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT