தேனி

போடி, உத்தமபாளையம், சின்னமனூா், பழனிபகுதிகளில் பலத்த மழை: அணைகள் நிரம்புகின்றன

16th Oct 2021 11:05 PM

ADVERTISEMENT

போடி, உத்தமபாளையம், சின்னமனூா், பழனி பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பழனி பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.

போடி பகுதியில் சனிக்கிழமை காலையில் சாரலாக தொடங்கி பலத்த மழையாக மாறி இரவு வரை நீடித்தது. இதனால் காமராஜா் சாலை, பெரியாண்டவா் நெடுஞ்சாலை ஆகியவற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. போடிமெட்டு மலைச்சாலையிலும் தமிழக, கேரள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடிமெட்டிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் சில இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போடியிலிருந்து போடிமெட்டு செல்லும் மலைச்சாலையை தேனி கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

உத்தமபாளையம்: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதியில் சனிக்கிழமை மாலை வரை பெய்த சாரல் மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அறுவை செய்ய முடியாமல் தவிப்பு: உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் முதல் போக நெற்பயிா் விவசாயம் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை பெய்யத் தொடங்கிய மழை மாலை வரை நீடித்ததால் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். பல இடங்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பு, பேருந்து நிலையம் மற்றும் தேனி சாலைகள் பலத்த மழையால் குண்டும் குழியுமாக மாறி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

பழனி: பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்தது. இதனால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பழனியை அடுத்த வரதமாநதி அணை முழு கொள்ளளவான 65 அடியை எட்டி கடந்த ஒரு மாதமாகவே நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது. அணைக்கு தற்போது விநாடிக்கு 24 கனஅடி நீா் வரத்து உள்ளது. அது அப்படியே வெளியேற்றப்படுகிறது. பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையில் 54 அடி உயரத்துக்கும், குதிரையாறு அணையில் 64 அடி உயரத்துக்கும் தண்ணீா் நிரம்பியுள்ளது. பாலாறு அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 68 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 9 கனஅடியாகவும் உள்ளது. குதிரையாறு அணையில் நீா்வரத்து விநாடிக்கு 3 கனஅடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு 3 கனஅடியாகவும் உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT