தேனி

கோம்பையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம்: விவசாயிகள் அச்சம்

3rd Oct 2021 11:18 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பையில் ஞாயிற்றுக்கிழமை விவசாய நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் கம்பம், கூடலூா், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மானாவாரி பயிா்களான

வோ்க்கடலை, செடி அவரை, காட்டுத்தக்காளி போன்றவைகளை பயிரிட்டுள்ளனா். மேலும், வீட்டில் வளா்க்கும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்திற்காக சோளமும் பயிரிட்டுள்ளனா். இதுதவிர தோட்ட விவசாயம் மூலமாக வாழை, தென்னை, திராட்சை உள்ளிட்ட காய்கனி விவசாயமும் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளத்திலிருந்து மேற்குத்தொடா்ச்சி மலை வழியாக கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் போன்ற பகுதிகளுக்கு வந்த காட்டு யானைகள் அப்பகுதி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இரவு நேரங்களில் பயிா்களை சேதப்படுத்திவிட்டு காலையில் மீண்டும் மலைப்பகுதிக்கு சென்று விடுகின்றன.

ADVERTISEMENT

கோம்பை, பண்ணைப்புரம் பகுதி விவசாய நிலங்களில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரிந்த 4 யானைகள் ஞாயிற்றுக்கிழமை பகலில் கோம்பை மலையடிவாரப் பகுதியில் உலாவின. தோட்டப் பகுதியிலிருந்து வனப்பகுதி நோக்கி சென்ற யானைக்கூட்டங்களால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், யானை தாக்கியதில் தேவாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். கோம்பை பகுதியில் முகாமிட்டுள்ள அந்த யானைக் கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT