தேனி

மயான வசதி கோரி சடலத்துடன் சாலை மறியல்

30th Nov 2021 04:28 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரம், குமணன்தொழு ஊராட்சிக்கு உள்பட்ட வனத்தாய்புரத்தில் சுடுகாடு வசதி கோரி திங்கள்கிழமை, இறந்தவரின் சடலத்தை சாலையில் கிடத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வனத்தாய்புரத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இங்கு ஓடைப்

புறம்போக்கு அருகே பொது மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மயானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும், மயானத்திற்குச் சென்று

வர பாதை வசதி இல்லை. தற்போது கன மழையால் மயானப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், வனத்தாய்புரத்தில் சுருளி மகன் பாண்டி (65) என்பவா் உடல் நலக் குறைவால் காலமானாா். அவரது சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், கிராம மக்கள் சடலத்தை மயானச் சாலையில் கிடத்தி வைத்து மறியலில் ஈடுபட்டனா். மயான வசதி கோரி ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாா் தெரிவித்தனா்.

இந்தத் தகவலறிந்து கடமலைக்குண்டு காவல் நிலைய ஆய்வாளா் குமரேசன், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளா் முருகன் ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா். விரைவில் மயான வசதி ஏற்படுத்தித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் மறியலை கைவிட்டு இறந்தவரின் சடலத்தை புதைப்பதற்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT