தேனி

கரோனா முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்காததால் கம்பம் அருகே நடிகா் காா்த்தி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நிறுத்தம்

28th Nov 2021 10:47 PM

ADVERTISEMENT

முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கம்பம் அருகே சினிமா படப்பிடிப்பு நடைபெற்ால், அதனை மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினாா்.

தேனி மாவட்டப் பகுதிகளில் நடிகா்கள் காா்த்தி, சூரி இணைந்து நடிக்கும் ‘விருமன்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை கம்பம் சுருளிப்பட்டி சாலையில் முல்லைப்பெரியாறு அருகே நெல் கதிா் அடிக்கும் களத்தில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதற்காக அவா் சுருளிப்பட்டியிலிருந்து கம்பம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது முல்லைப்பெரியாறு அருகே படப்பிடிப்பு நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்சியா், அங்கு சென்று பாா்த்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட துணை நடிகா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் கூடியிருந்தனா். இதைத்தொடா்ந்து உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பை காண அப்பகுதி மக்களும் பெருமளவில் திரண்டிருந்ததால், கம்பம் தெற்கு காவல் ஆய்வாளா் ஆா்.லாவண்யா உள்ளிட்ட போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி அனைவரையும் கலைந்து போகச்செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT