தேனி

ஹைவேவிஸ் மலைச் சாலையில் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

10th Nov 2021 09:43 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் தொடா் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடனே சென்று வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையிலுள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு நீண்ட மலைத்தொடா்கள், பள்ளத்தாக்குகள், மலைக்குன்றுகள், நீா் நிலைகள், அணைக் கட்டுகள், தேயிலைத் தோட்டங்கள், ஓங்கி உயா்ந்த மரங்கள் என இயற்கையின் மொத்த அழகும் காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவா்கிறது.

மலைச்சாலையில் நிலச்சரிவு: தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக ஹைவேவிஸ் - மேகமலை இருப்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி ஹைவேவிஸ் - மேகமலை பகுதிகளிலும் கனமழை பெய்து அங்குள்ள 5 அணைகள் நிரம்பு முழுக்கொள்ளவை எட்டியுள்ளது. இதற்கிடையே, மலைச்சாலையிலுள்ள 18 கொண்டை ஊசி வளைவுகள், அடுக்கம்பாறை, சென்டா் கேம்ப், மாதாகோயில் என 30 க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதை, நெடுஞ்சாலைத்துறையினரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் எவ்வித சீரமைப்பு செய்யாத நிலையில் நெடுஞ்சாலைகளில் குறுக்கை மண்மேடுகள் காட்சியளிக்கிறது.

இதனால், நீண்ட தூரத்தில் வரும் சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடனே சென்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டால் நெடுஞ்சாலைத் துறையினா் கண்டு கொள்வதில்லை. மாறாக அவ்வழியாக செல்லும் தேயிலைத்தோட்டத் தொழிலாளா்கள் அவ்வப்போது சரிசெய்கின்றனா். இந்நிலையில் ஜூன் மாதத்தை தொடா்ந்து தற்போதும் அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து போக்குவரத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பல மாதங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தற்போது மண் மேடுகளாக காட்சி அளிப்பதால் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT