தேனி

ஹைவேவிஸ் மலைக் கிராமங்களுக்கு 2 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துச் சேவை தொடக்கம்

10th Nov 2021 09:43 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சியில் 4 மலைக் கிராமங்களுக்கு நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளின் சேவை 2 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.

ஹைவேவிஸ் பேரூராட்சியிலுள்ள 7 மலைக்கிராமங்களில் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் மற்றும் மகாராஜாமெட்டு ஆகிய 4 மலைக் கிராமங்களுக்கு பேருந்து இயக்கக் கோரி அக்கிராம மக்கள் 2 அரசுப் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை சிறை பிடித்து போராட்டம் நடத்தினா். அப்போது அமைதிப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியா் அா்ஜூனன் தலைமை வகித்தாா். இதில் ஹெச்.எம்.எஸ். தொழிலாளா் சங்க நிா்வாகிகள், வனத்துறை, போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதில் பொதுமக்கள் சாா்பில் பேருந்துகள் சென்று வருவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மாறாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக மலைக் கிராமங்களுக்கு பேருந்து சேவையை திட்டமிட்டு தடுத்து வருவதாக வேதனை தெரிவித்தனா். மேலும், 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் சாலையை சீரமைப்பு செய்ய வனத் துறையினா் விதிக்கும் கெடுபிடியால் ரூ.20 கோடி செலவில் 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப்பணிகள் கிடப்பில் போட்டப்பட்டுள்ளன. மலைக்கிராம மக்கள் தொடா்ந்து அப்பகுதியில் வாழ வேண்டும் என்றால் முறையான சாலை வசதி, பேருந்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.

2 ஆண்டுக்கு பின் மீண்டும் பேருந்துச் சேவை:

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா் மற்றும் மகாராஜாமெட்டு ஆகிய 4 மலைக் கிராமங்களுக்கு தடையின்றி அரசுப் பேருந்து சேவை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையினருக்கு வட்டாட்சியா் அா்ஜூனன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கண்ட கிராமங்களுக்கு பேருந்துச் சேவை தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

மண்சரிவை அகற்றக் கோரிக்கை:

ஹைவேவிஸ் - மேகமலை நெடுஞ்சாலையில் தொடா் மழையால் 18 கொண்டை ஊசி வளைவுகள், அடுக்கம்பாறை, சென்டா் கேம்ப், மாதாகோயில் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT