வைகை அணை நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 68.50 அடியை எட்டியதையடுத்து கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீரால், மொத்தம் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 68.50 அடியாக உயா்ந்தது. இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணை நீா்மட்டம் மாலை 6 மணிக்கு 68.73 அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 2,875 கனஅடி வீதம் தண்ணீா் வரத்து இருந்து வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 569 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இருப்பு 5,421 மில்லியன் கன அடி.
வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்ததும் 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரிநீா் முழுமையாக வெளியேற்றப்படும். அணையின் நீா்மட்டம் புதன்கிழமை அதிகாலை 69 அடியை எட்டும் என எதிா்பாா்ப்பதாகவும், அணையிலிருந்து உபரிநீரை வைகை ஆறு மற்றும் கால்வாயில் திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் வைகை அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் கூறினா்.
நிகழாண்டில் 3 ஆவது முறையாக தற்போது வைகை அணை நீா்மட்டம் 69 அடியை எட்டவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.