தேனி

சாக்குலத்துமெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானங்கள்: வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

30th Jan 2021 06:55 PM

ADVERTISEMENT

சாக்குலத்து மெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையினரை கண்டித்து தேவாரத்தில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாக்குலத்துமெட்டு வழியாக  கேரளத்துக்கு சாலை அமைக்க வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பகுதி வனப்பகுதி என்றும், வன விலங்குகள் பாதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் சாலை அமைக்க அனுமதி மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சாக்குலத்து பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கட்டுமானப் பணிகளை செய்து வருகிறது.

இதற்கு தேனி மாவட்ட வனத்துறை அனுமதி வழங்கியது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பொதுமக்கள் பாதைக்கு அனுமதி வழங்க மறுத்து, தனியார் நிறுவனத்திற்கு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்கிய வனத்துறையை கண்டித்து தேவாரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தலைமை வகித்தார். 

ADVERTISEMENT

தேவாரம் சுற்றுப்புற விவசாயிகள் சங்கம் சார்பில் முருகன், ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேவாரம் வர்த்தகர் சங்கம், பென்னிகுவிக் விவசாயிகள் சங்கம், இளநீர் வியாபாரிகள் சங்கம், ஏலத்தோட்ட தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, சாக்குலத்துமெட்டு வனப்பகுதியில் தனியார் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாக்குலத்துமெட்டு சாலையை அமைக்க வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags : protest
ADVERTISEMENT
ADVERTISEMENT