தேனி

கூடலூர் பகுதியில் சிதைந்த பழங்கால நினைவுச் சின்னங்களை மீட்கக் கோரிக்கை

4th Jan 2021 02:02 PM | செ.பிரபாகரன்.

ADVERTISEMENT

கூடலூர் பகுதிகளில் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் கிடைக்கின்றன. அவற்றை மீட்டு அருங்காட்சியகத்தில் வைக்க வரலாற்று ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ளது கூடலூர் நகராட்சி. இந்த பகுதியை ஒட்டி மேகமலை வன உயிரின சரணாலய பகுதி உள்ளது. சிலப்பதிகாரம் புகழ் கண்ணகி தன் கணவன் கோவலன் இறந்த உடன் மதுரை நகரை எரித்துவிட்டு ஆவேசமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கால்நடையாக நடந்து வந்து வழியில் வெண்ணை டியர் பாறை எனப்படும் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இருந்து வானுலகம் அடைந்தார் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. இந்த வரலாற்று நிகழ்வுகள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே நடந்துள்ளது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பறையர் குடி மங்கலதேவி கண்ணகி கோயில் போன்றவைகள் இன்றும் உள்ளன.

போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களை விண்ணுலகம் அழைத்து செல்லும் சிற்பம்.

ADVERTISEMENT

இதைப்போலவே கூடலூர் பகுதியிலும் வரலாறுகளை மெய்ப்பிக்கும் வகையில் நினைவு கல்தூண் சிற்பங்கள் இன்றும் சான்றாக உள்ளது. கூடலூர் லோயர் கேம்ப் செல்லும் சாலையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் தங்கியிருந்த விடுதி தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த விடுதி வளாகத்திற்குள் நடுகல் ஒன்று உள்ளது. இந்த நடுகல்லை வணங்கிவட்டுத்தான் முல்லைப் பெரியாறு அணை பணிகளைப் பார்வையிட செல்வார் எனக் கூறப்படுகிறது. அந்த கல் சிற்பம்  தற்போது அப்படியே உள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் அருகே துப்பாக்கி ஏந்திய வீரன் நடுகல் சிற்பம் ஒன்று உள்ளது. நடுகல் நினைவுச் சின்னங்களில் கையில் வாள், வில், அம்பு ஏந்திய சிற்பங்கள் நடுகற்கள்தான் இருக்கும்.

ஒரு கையில் வாள், மற்றொரு கையில் வில் அம்பு ஏந்திய வீரன் நடுகல்.

ஆனால் துப்பாக்கி ஏந்திய நடுகல் கூடலூர் பகுதியில் மட்டும் உள்ளது. ஒரு சிறப்பான நிகழ்வாக உள்ளது. இதைப்பற்றி வரலாற்று ஆர்வலர்கள் கூறும்போது, 17ஆம் நூற்றாண்டிலேயே கூடலூர் பகுதியில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை காட்டும் சிற்பமாக உள்ளது என்று தெரிவித்தனர். மற்றொரு சிற்பத்தில் வாளேந்திய வீரன், அவனுடன்  காளை மாடு ஒன்றும் உள்ளது போல் ஒரு புடைப்புச் சிற்பம் உள்ளது. இந்த சிற்பம் ஆநிரை கவர்தல் என்ற நிகழ்வை விளக்குவதாக உள்ளது. பண்டைய காலத்தில் மக்களின் செல்வங்களான ஆடு, மாடு போன்ற கால்நடைச் செல்வங்களை மேய்ச்சலுக்கு செல்லும் பொழுது, மற்றொரு குழு மக்கள் கூட்டமாக வந்து கால்நடைகளை திருடிச் செல்லும்போது அவர்களுடன் போரிட்டு மடிந்த வீரன் நினைவாக இந்த சின்னம் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

ஆதிரை கவர்தலை தடுத்து நிறுத்த போராடிய வீரன் நடுகல்.

மற்றொரு நடுகல் 4 அடி உயரமும் ஒரு அடி அகலமாக உள்ளது.  இதில் போர்க்களத்திற்குச் சென்ற வீரர்கள் வீரமரணம் அடைந்து அவர்களை விண்ணுலகத்திற்கு தேவ மாந்தர்கள் அழைத்துச் செல்வது போல் உள்ள சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. போருக்குச் செல்லும் வீரர்கள் இந்த நடுகல்லை வணங்கி படையலிட்டு பூஜைகள் நடத்தி போருக்கு செல்வார்கள் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தேனிமாவட்ட வரலாற்று மைய ஆர்வலர் சோ.பஞ்சு ராஜா கூறுகையில், கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் பழங்கால நினைவு கல்வெட்டு சின்னங்கள் உள்ளன. வருங்கால சந்ததியினர் இந்த வரலாற்றை தெரிந்துகொள்ள மாவட்ட அருங்காட்சியகத்தில் நடுகற்களை எடுத்துவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


 

Tags : theni
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT